இந்த மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கு காணலாம்.
அமெரிக்கப் போர்க்கப்பல்கள் ஈரானிய துறைமுகங்களுக்குள் நுழையும் அல்லது வெளியேறும் அனைத்து கடல்வழிப் போக்குவரத்தையும் திங்கட்கிழமை காலை 10:00 மணிக்கு (கிழக்கு நேரம்) முற்றுகையிடத் தொடங்கும் என்று அமெரிக்க மத்திய கட்டளைப் பிரிவு ஞாயிற்றுக்கிழமை அறிவித்தது. வழிகாட்டல் முறைமையுடன் கூடிய அழித்தொழிப்பு ஏவுகணைகளைக் கொண்ட கப்பல்களான யு.எஸ்.எஸ். மைக்கேல் மர்பி, யு.எஸ்.எஸ். ஃபிராங்க் இ. பீட்டர்சன் ஜூனியர் ஆகியவை சனிக்கிழமையன்று ஹார்முஸ் நீரிணைக்குள் நுழைந்தன.
1979 புரட்சிக்குப் பிறகு அமெரிக்க மற்றும் ஈரானிய அதிகாரிகளுக்கு இடையே நடைபெற்ற மிக உயர் மட்டத்திலான நேரடி சந்திப்பான, துணை ஜனாதிபதி ஜே.டி. வான்ஸ், ஈரானிய நாடாளுமன்ற சபாநாயகர் முகமது பாகர் காலிபாஃப் ஆகியோருக்கு இடையே இஸ்லாமாபாத்தில் 21 மணி நேரம் நடைபெற்ற பேச்சுவார்த்தையைத் தொடர்ந்து இந்த முற்றுகை இடப்பட்டுள்ளது. அனைத்து அணு ஆயுத செறிவூட்டல் வசதிகளையும் அகற்றுதல், கிட்டத்தட்ட 1,000 பவுண்டுகள் செறிவூட்டப்பட்ட யுரேனியத்தை ஒப்படைத்தல், ஹிஸ்புல்லா மற்றும் ஹமாஸுக்கான ஆதரவை விலக்கிக்கொள்ளல் மற்றும் ஹோர்முஸ் நீரிணையை நிபந்தனையின்றி மீண்டும் திறத்தல் ஆகிய, ஈரானை ஒரு காலனித்துவ காப்பரசாக மாற்றும் வகையிலான அமெரிக்காவின் கோரிக்கைகளை ஏற்றுக்கொள்ள ஈரான் மறுத்துவிட்டது. வான்ஸ், அமெரிக்காவின் முன்மொழிவை 'எங்களின் இறுதியும் சிறந்ததுமான சலுகை' என்று கூறிவிட்டு, மேலதிக பேச்சுவார்த்தைகளைத் திட்டமிடாமல் அங்கிருந்து சென்றுவிட்டார்.
அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப், ஞாயிற்றுக்கிழமை, றுத் என்ற தன்னுடைய சமூக வலைத் தளத்தில் இந்த முற்றுகையை பிரகடனம் செய்து, 'உடனடியாக அமலுக்கு வரும் வகையில், உலகின் தலைசிறந்த அமெரிக்க கடற்படை, ஹோர்முஸ் நீரிணைக்குள் நுழைய அல்லது வெளியேற முயற்சிக்கும் அனைத்து கப்பல்களையும் முற்றுகையிடும் நடவடிக்கையைத் தொடங்கும்' என அறிவித்தார். நீர்வழிப்பாதையின் மீதான ஈரானின் கட்டுப்பாட்டை அவர் “உலக அபகரிப்பு” என்று வகைப்படுத்தியதோடு “சர்வதேச கடல் பகுதியில் ஈரானுக்கு சுங்கம் செலுத்திய ஒவ்வொரு கப்பலையும் தேடிப்பிடித்து இடைமறிக்குமாறு” கடற்படைக்கு உத்தரவிட்டார்.
“எங்கள் மீதோ அல்லது தொந்தரவு செய்யாத கப்பல்கள் மீதோ துப்பாக்கிச் சூடு நடத்தும் எந்தவொரு ஈரானியரும் நரகத்திற்குத் தூக்கி எறியப்படுவார்கள்!” என்று ட்ரம்ப் மேலும் கூறினார். இறுதியில், “ஈரானில் எஞ்சியிருக்கும் கொஞ்சத்தையும் நமது இராணுவம் முடித்துவிடும்!” என்று அவர் கூறினார்.
ஞாயிற்றுக்கிழமை ஃபொக்ஸ் நியூஸ் நேர்காணலில், ஈரானின் எஞ்சியிருக்கும் குடியிருப்பு உள்கட்டமைப்பை அழித்துவிடுவதாக ட்ரம்ப் அச்சுறுத்தினார். “உண்மையில், எஞ்சியிருக்கப் போவது அவர்களின் தண்ணீர் மட்டுமே. அதைத் தாக்குவது மிகவும் பேரழிவை ஏற்படுத்தும்.” “அதைச் செய்ய நான் விரும்பவில்லை, ஆனால், அவர்களின் தண்ணீர், அவர்களின் கடல்நீரை குடிநீராக்கும் ஆலைகள், அவர்களின் மின் உற்பத்தி நிலையங்கள் ஆகியவற்றைத் தாக்குவது மிகவும் எளிது,” என்று அவர் கூறினார்.
ஏப்ரல் 1 அன்று, ட்ரம்ப் பிரதான நேர உரை ஒன்றில் ஈரானை 'கற்காலத்திற்குத் திருப்பி அனுப்புவதாக' சூளுரைத்ததோடு, 'அவர்களின் ஒவ்வொரு மின் உற்பத்தி நிலையத்தையும்' அழிப்பதாக அச்சுறுத்தினார். ஈஸ்டர் ஞாயிறன்று, அவர் 'அல்லாஹ்வுக்கே எல்லாப் புகழும்' என்று கையெழுத்திட்டு, வசைச்சொற்கள் நிறைந்த ஒரு அச்சுறுத்தலைப் பதிவிட்டார். ஏப்ரல் 7 திகதி, பாகிஸ்தானின் மத்தியஸ்தத்தில் இரண்டு வார கால போர் நிறுத்தத்தை ட்ரம்ப் அறிவித்தார். அந்தப் போர் நிறுத்தம் ஐந்து நாட்கள் மட்டுமே நீடித்தது.
இந்த முற்றுகை அறிவிப்பால், ஒரு பீப்பாய் எண்ணெய் விலை 100 டொலருக்கும் மேல் உயர்ந்தது. டவ் பங்கு சுட்டெண்கள் 517 புள்ளிகள் சரிந்தது. நாடு முழுவதும் ஒரு கலன் பெட்ரோலின் விலை, பெப்ரவரி 28 முதல் 38 சதவீதம் உயர்ந்து 4.13 டொலர்கள் ஆகியதோடு மேலும் ஐந்து மாநிலங்களில் விலை 5 டொலருக்கும் அதிகமாக உள்ளது. அறுநூறுக்கும் மேற்பட்ட கப்பல்கள் வளைகுடாவில் சிக்கியுள்ளன. கோல்ட்மேன் சாக்ஸ், இந்த ஜலசந்தி மூடப்பட்டதை 'பதிவு செய்யப்பட்ட வரலாற்றில் மிகப்பெரிய எண்ணெய் விநியோக அதிர்ச்சி' என்று வர்ணித்துள்ளதுடன், அமெரிக்கப் பொருளாதார மந்தநிலைக்கான நிகழ்தகவை 30 சதவீதமாக உயர்த்தியுள்ளது. பிலிப்பைன்ஸ் தேசிய எரிசக்தி அவசரநிலையை அறிவித்துள்ளது. பொதுவாக உலகளாவிய உர விநியோகத்தில் மூன்றில் ஒரு பங்கு இந்த ஜலசந்தி வழியாகவே செல்கிறது; யூரியா விலை ஒரே வாரத்தில் 32 சதவீதம் உயர்ந்துள்ளது.
இந்த நீர்வழிப்பாதை அதன் குறுகிய இடத்தில் 21 மைல்கள் அகலம் கொண்டது. கப்பல் போக்குவரத்துப் பாதை ஒவ்வொரு திசையிலும் இரண்டு மைல்கள் அகலம் கொண்டது. இந்த நீர்வழிப்பாதையை ஒட்டியுள்ள ஈரானியக் கடற்கரையில், கப்பல் எதிர்ப்பு ஏவுகணைத் தளங்கள், கடலோரப் பீரங்கிகள் மற்றும் ஆளில்லா விமான ஏவுதளங்கள் வரிசையாக அமைந்துள்ளன. ஈரான், சுமார் 5,000 முதல் 6,000 வரையிலான கடற்படைக் கண்ணிவெடிகளைக் கொண்டிருப்பதாக மதிப்பிடப்பட்டுள்ளதுடன், அவை எங்கு பதிக்கப்பட்டன என்பதைக் 'கண்டறிய முடியவில்லை' என்றும் கூறியுள்ளது. அதன் அதிவேகத் தாக்குதல் படகுகளில் 60 சதவீதத்திற்கும் அதிகமானவை சேதமடையாமல் உள்ளன.
இந்த நீர்வழிப்பாதைக்கு அருகாமையில் இயங்கும் அமெரிக்கப் போர்க்கப்பல்கள், ஈரானியக் கடற்கரையிலிருந்தும், இந்த நீர்வழிப்பாதைக்குள் ஈரான் கட்டுப்படுத்தும் தீவுகளிலிருந்தும் வரும் ஏவுகணை மற்றும் ஆளில்லா விமானத் தாக்குதல்களுக்கு உள்ளாகக் கூடும். ஒரு எச்சரிக்கைச் சூடு, ஒரு கண்ணிவெடித் தாக்குதல், அல்லது ஒரு போர்க்கப்பல் மீதான ஆளில்லா விமானத் தாக்குதல் போன்ற எந்தவொரு துப்பாக்கி மோதலும் அமெரிக்க இராணுவத்தினருக்குக் கணிசமான உயிரிழப்புகளை ஏற்படுத்துவதோடு, போரை மேலும் பெருமளவில் தீவிரப்படுத்துவதற்கான சூழலையும் உருவாக்கும். பெப்ரவரி 28 முதல் பதின்மூன்று அமெரிக்க சிப்பாய்கள் கொல்லப்பட்டுள்ளனர். ஒரு போர்க்கப்பலை இழப்பது அல்லது மாலுமிகள் சம்பந்தப்பட்ட ஒரு பெரும் உயிரிழப்பு சம்பவம், இந்த மோதலின் அரசியல் போக்கை ஒரே இரவில் மாற்றிவிடும்.
கடந்த ஆறு வாரங்களாக, அமெரிக்க அரசியல் ஸ்தாபனத்தின் முன்னணி பிரமுகர்கள், ஈரானின் 90 சதவீத எண்ணெய் ஏற்றுமதி நடைபெறும் கார்க் தீவைக் கைப்பற்றுவது உட்பட, ஈரான் மீது தரைவழிப் படையெடுப்புக்கு அழைப்பு விடுத்து வருகின்றனர். மூன்று கடற்படைப் பயணப் பிரிவுகளைச் சேர்ந்த கடற்படை வீரர்களும், 82வது வான்வழிப் பிரிவின் ஒரு போர்ப் படைப்பிரிவும் பாரசீக வளைகுடாவிற்கு வந்தடைந்துள்ளனர் அல்லது அங்கு செல்லும் வழியில் நிற்கின்றனர். இப்பகுதி முழுவதும் 50 ஆயிரத்துக்கும் மேற்பட்ட அமெரிக்க சிப்பாய்கள் நிலைநிறுத்தப்பட்டுள்ளனர்.
'எந்தவொரு பெயரிலோ அல்லது சாக்குப்போக்கிலோ' எந்தவொரு இராணுவக் கப்பலும் ஜலசந்தியை அணுகினால், அது போர்நிறுத்த மீறலாகக் கருதப்படும் என்றும், 'கடுமையான பதிலடியை' சந்திக்கும் என்றும் ஈரானின் புரட்சிகரக் காவலர்கள் ஞாயிற்றுக்கிழமை எச்சரித்தனர். அதி உயர் தலைவர் மொஜ்தபா கமேனியின் சிரேஷ்ட ஆலோசகரான மொஹ்சென் ரெசாய், எந்தவொரு முற்றுகையையும் முறியடிக்க ஈரானிடம் 'பெரிய, பயன்படுத்தப்படாத நெம்புகோல்கள்' இருப்பதாகக் கூறினார்.
ஞாயிற்றுக்கிழமை X தளத்தில் எழுதிய, வெளியுறவு அமைச்சர் அப்பாஸ் அராக்சி, 'போரை முடிவுக்குக் கொண்டுவர ஈரான் அமெரிக்காவுடன் நல்லெண்ணத்துடன் பேச்சுவார்த்தை நடத்தியது. ஆனால், போர்நிறுத்த நிபந்தனைகளை முறைப்படுத்தியிருக்கக்கூடிய, 'இஸ்லாமாபாத் புரிந்துணர்வு ஒப்பந்தத்தை' எட்டுவதற்கு மிக நெருக்கமாக இருந்தபோது, நாங்கள் அதீதப் போக்கையும், மாறிக்கொண்டே இருக்கும் இலக்குகளையும், முற்றுகையையும் எதிர்கொண்டோம்' என்று எழுதினார்.
ஐந்து நாட்களுக்கு முன்பு, பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீஃப், 'அமெரிக்காவும் ஈரானும், அவற்றின் கூட்டாளிகளுடன் சேர்ந்து, லெபனான் மற்றும் ஏனைய இடங்கள் உட்பட எல்லா இடங்களிலும் உடனடியாக அமலுக்கு வரும் வகையில் போர்நிறுத்தத்திற்கு ஒப்புக்கொண்டுள்ளன' என்று அறிவித்தார். ஒரு நிரந்தரத் தீர்வுக்காகப் பேச்சுவார்த்தை நடத்த, ஏப்ரல் 10 அன்று இஸ்லாமாபாத்திற்குப் தூதுக்குழுக்களை அவர் அழைத்தார்.
இந்த மோதலில் ட்ரம்ப் அறிவித்த ஒவ்வொரு போர்நிறுத்தமும், மேலும் இராணுவ நடவடிக்கைகளுக்கு வழிவகுத்தே வந்துள்ளது. 'ஆபரேஷன் மிட்நைட் ஹேமர்' நடவடிக்கையை நிறுத்திய 2025 ஜூன் போர்நிறுத்தத்திற்குப் பிறகு, எட்டு மாதங்கள் கழித்து பெப்ரவரி 28 அன்று தொடங்கிய முழு அளவிலான தாக்குதலுடன் அமெரிக்கா போரை மீண்டும் தொடங்கி விரிவுபடுத்தியது. அமெரிக்காவின் மூலோபாய நோக்கங்கள் மாறவில்லை. பாரசீக வளைகுடா மற்றும் ஹோர்முஸ் ஜலசந்தி மீது நேரடிக் கட்டுப்பாட்டை திணிக்கவும், அமெரிக்காவின் பூகோள மேலாதிக்கத்திற்கு ஈரான் ஒரு தடையாக இருப்பதில் இருந்து அதை அகற்றவும் வாஷிங்டன் இந்தப் போரைத் தொடங்கியது. இந்த முற்றுகை அந்தத் திட்டத்தின் அடுத்த கட்டமாகும்.
ட்ரம்ப் போரை நடத்தும் விதத்தை விமர்சித்தாலும், ஜனநாயகக் கட்சி அதன் அடிப்படை நோக்கங்களை ஏற்றுக்கொள்கிறது. செனட்டர் டிம் கெய்ன், ஞாயிற்றுக்கிழமை ஏபிசி இன் 'திஸ் வீக்' நிகழ்ச்சியில் பேசிய போது, 'அவர்கள் ஒரு பிராந்திய அச்சுறுத்தல். அந்த ஆட்சி நிச்சயமாக தீய சக்திகளைக் கொண்டது. ஈரான் அணு ஆயுதத்தைப் பெறாமல் இருப்பதை நாம் உறுதி செய்ய வேண்டும்,' என்று கூறினார். அதே நேரம், பாராளுமன்றத்தின் அங்கீகாரம் இல்லாமல் ட்ரம்ப் போரை நடத்துவதையும் அவர் விமர்சித்தார்.
அதே அரசியல் நிலைப்பாட்டில் பேசிய நியூ யோர்க் டைம்ஸ் ஆசிரியர் குழு, ஞாயிற்றுக்கிழமை ட்ரம்பின் நடத்தையை 'வெளிப்படையான திறமையின்மை' என்று அழைத்ததுடன், 'பாராளுமன்றத்தை ஈடுபடுத்தி, அமெரிக்காவின் நட்பு நாடுகளிடமிருந்து உதவியை நாடுமாறு' அவரை வலியுறுத்தியது.
மேலும் படிக்க
- போர்நிறுத்த ஒப்பந்தம் குறித்த ஆழமான பிளவுகளுக்கு மத்தியில், லெபனான் மீது இஸ்ரேல் பாரிய தாக்குதலைத் தொடுத்துள்ளது
- துருக்கிய அலைவரிசை TV5 உடனான நேர்காணலில் போர் எதிர்ப்பு இயக்கத்தைக் கட்டியெழுப்புமாறு டேவிட் நோர்த் அழைப்பு விடுக்கிறார்
- கட்டாய இராணுவச் சேவையை எதிர்த்திடு! ஏகாதிபத்திய போருக்கு எதிராக தொழிலாள வர்க்க இயக்கத்தை கட்டியெழுப்பு!
